Tuesday, May 8, 2007

கிராம தேவதைகளுக்கான வழிபாடு - முதல் பதிவு

கிராமத்துப் பக்கங்கள் என்னும் இந்த தொகுப்பில் இருப்பவை அனைத்துமே கிராமம் சார்ந்தவைகளே.அதாவது கிராமத்தில் நான் கேட்ட கதைகள், அனுபவித்த சந்தோஷங்கள், என அனைத்துமே கிராமத்தைச் சுற்றியே!கிராமம் பற்றிய பழையபதிவு.எனவே கிராம வழக்கப்படி ஒரு காரியம் செய்வதற்கு முன் கிராமத்தை சுற்றியுள்ள தெய்வங்களை வணங்குதல் முறை.அது வெளிநாடு போவதாக இருக்கட்டும்.பரீட்சை எழுதி முடித்ததாக இருக்கட்டும். கையில் ஒரு ஐந்து அல்லது ஆறு தேங்காயுடன் யாரவது கிளம்பிவிட்டால் அவர் ஒருரவுண்டு போய் அனைத்து சாமிகளையும் கும்பிடப் போகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று!

என்ன ஒரு குறை அனைத்தையும் சிதறு தேங்காய் உடைக்கமாட்டார், பொத்துனாப்புல ஒடச்சு சாமிக்கு வெறும் தேங்காய் தண்ணீ மட்டுமே, தேங்காய் அடுத்த நாள் சட்னிக்கு!

இதேபோல் கிராம வழக்கப்படி இந்தப் பதிவு தொடங்குவதற்கு முன் என் கிராமத்தைச் சுற்றியுள்ள தெய்வங்களை வணங்கலாம், பதிவில் தேங்காய் உடைக்கமுடியாதென்பதால் சும்மா கும்பிட்டுட்டு வரலாம்!நீங்களும் பக்தியுடன் பின் தொடருங்கள்(அதுக்காக மானிட்டருக்குப் பின்னால் போகவேண்டாம்!) நல்லதே நடக்கும்!



முதலில் மூலமுதற்கடவுள் பிள்ளையார், கம்மாக்கரையில் வீற்றிருப்பவரும், தற்பொழுது கும்பாபிஷேகத்திற்கு தயாராகின்றவருமாகிய பிள்ளையாரை வணங்குவோம்!(எல்லாப் பிள்ளையாரையும் போல் இந்தப் பிள்ளையாரும் அடுத்த ஊரிலிருந்து ஆட்டயப் போடபட்டதே)


கிழக்கில் இருக்கும் கருப்புளமடம்(கருப்பையா பிள்ளை மடம்) குமரக் கடவுளையும், கம்மாய் மடையினருகில் இருக்கும் மடக்கிரயானையும்(பெயர்காரணம் இதுவரை தெரிந்துகொண்டதில்லை! இனி கேட்டு அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்).



மேற்கிலிருக்கும் வயக்காட்டுக் காளியையும், வடக்கிலிருக்கும் வேலப்பூரணி(வேலப்பன் ஊரணி)ஐய்யனார்,மாவிடியான்(கோவக்காரச் சாமி, இந்தச்சாமி இருக்கிறபக்கம் இப்பொழுதும் காலை நீட்டி உட்காரவோ,படுக்கவோ எனக்கு பயம்),மற்றும் எல்லையில் இருக்கும் அய்யங்கோவில் அய்யனாரையும் வணங்கி பின் தெற்கே கம்மாய்க்குள் இருக்கும் வீரபத்திர சுவாமியையும் பக்தியுடன் வணங்கி இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.


அன்புடன்...
சரவணன்

3 பின்னூட்டங்கள்:-:

said...

பதிவின் அமைப்பிற்கு உதவிய திரு.வரவணைசெந்திலுக்கும்,இந்தப் பதிவின் நிமித்தம் எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களையும் ,பதிவின் வார்ப்புருவை மேம்படுத்தவும் உதவியும்,தொடர்ந்து பதிவிட உற்சாகமூட்டிய என் அன்புச் சகோதரர் திரு.மா.சிக்கும் நன்றி.


அன்புடன்...
சரவணன்.

said...

கிராம தெய்வங்கள் பற்றிய தொடர், முந்தி முந்தி விநாயகனைத் தொட்டு, அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது.

வாழ்த்துகள்!

said...

அமர்க்களமாக ஆரம்பிக்க்கும் படி மயிலின் மீது வந்து வாழ்த்திய அன்பர் திரு.VSK அவர்களுக்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.