Wednesday, May 28, 2008

கிராமத்துக் காதல் கதைகள் -1 கருச ஊரணிக கரையினிலே பாகம்-2

கிராமத்துக் காதல் கதைகள்-1 கருச ஊரணிக் கரையினிலே பாகம்-1

ஊரணியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனி 'துறை" உண்டு. ஆனால் அவைகளுக்கிடையேயான இடைவெளி மிகவும் குறைவு.கணவன் மனைவிக்கிடையே "சோப்பு" பரிமாற்றிக் கொள்ளக் கூடிய இடைவெளியே இருக்கும்.

அவள் அக்கரையில் கால் வைத்தது முதல் குளித்துவிட்டு கரையேறி மறையும் வரை அவளை அக்கறையுடன்((??!!) பார்த்துக் கொண்டோயிருப்பான்.அவள் சோப்பு போடும் பொழுது மட்டும் அவளுக்கு "தெரிவது" போல் மரியாதை நிமித்தமாக வேறு பக்கம் திரும்பிக்கொள்வான்.(அப்படியாவது தன்னை நல்லவன் என்று நினைத்து காதலிக்க மாட்டாளா? )

அவளை ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும் அவனால் நிம்மதியாக உண்டு,உறங்க முடியவில்லை.(காலில் இருந்து வளர ஆரம்பித்த காதல் செடி அவன் நெஞ்சை தொட்டுவிட்டதை அவனும் உணர்ந்தான்),



திடீரென பெண்கள் அனைவரும் அந்த ஊரணியில் புதியதுறை கண்டு அங்கு குளிக்க போய் விட்டனர்,அது சற்றுதொலைவில்... இல்லை இல்லை.. அதிகப்படியான தொலைவில் இருந்தது. ஆனால் அவளும் அவள் தோழிகளும் தொடர்ந்து பழைய துறையில் குளித்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

அவன் பயந்தது நடந்தே விட்டது ஆம்! சில சமூக விரோதிகள்(??!) பெண்கள் பகுதியிலிருந்த கல்லை(பெண்கள் துவைப்பதற்கும்,மஞ்சள் உரசுவதற்கும் பயன்படுத்தும் கல்)எடுத்து அந்த புதிய துறையில் வைத்துவிட்டனர்(பாவம் யாரோ யாருக்காகவோ!!!),

அவன் வழக்கம் போல் 5 மணிக்கு காத்திருந்தான்,அவளும் வந்தால், ஆனால் அவள் புதிய துறைக்கு சென்று விட்டால்,அவன் குளிக்கும் இடத்திலிருந்து அவளை பார்ப்பது கடினமாகவே இருந்தது,இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய அவன் தன்னுடைய 3 சேக்காளிகளையும் ழைத்துக் கொண்டு யாருமற்ற இரவு நேரத்தில் அந்த கல்லை பழைய இடத்திற்க்கே கொண்டுவந்து சேர்த்தான்.அவளும் அங்கு தொடர்ந்து வர ஆரம்பித்தாள்,

<

படித்துவிட்டு கிராமத்தில் இப்படி சந்தோசமாக இருந்த சமயத்தில் தான் அவனுடைய அப்பா அவனை எதாவது வேலைக்கு போக சொல்லி "தொந்தரவு" கொடுக்க ஆரம்பித்தார்.அவள் கல்லூரி இருக்கும் மாவட்ட தலைநகரத்திலேயே வேலை தேடினால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தீவிர தேடலுக்குப்(??!)பின் ஒரு வேலை கிடத்தது அதுவும் அவள் கல்லூரியை சுற்றி உள்ள COMPLEX-ல், புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில்,கொஞ்ச நாளைக்கு சம்பளம் கிடையாது சும்மா TRAINIE-ஆக மட்டும் வேலை பார்க்க சம்மதமா என்றார்கள்(உங்களிடம் வேலை பார்ப்பதற்க்கு உங்களுக்கு நான் வேண்டுமானால் சம்பளம் தருகிறேன்! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்),

நாட்கள் வேகமாக நகர ஆரம்பித்தது, அவளும் இரண்டாம் ஆண்டு படிக்க ஆரம்பித்தால், அப்பொழுதும் அவன் அதே TRAINIE நிலையிலேயே இருந்தான், அவனால் குடும்பத்திற்கு வருமானம் எதுவும் இல்லையென்றாலும் தொந்தரவு பண்ணாமல் தினமும் வேலைக்குச் சென்றதே பெரிய விசயம் என வீட்டில் இருப்பவர்களும் அவனை தண்ணீர் தெளித்து விட்டனர்


இப்பொழுதெல்லாம் நான் தினமும் வேலைக்கு
செல்வதை நினைத்து சந்தோஷப்படுகிறாள் என் தாய்...
பாவம் அவளுக்கு எப்படி தெரியும்
என்னவளைப் பார்ப்பது மட்டுமே என்
முழுநேர வேலை என்பது...

என்று சந்தோசமாக இருந்தான், வில்லன் இல்லாத காதல் கதையா?

அன்புடன்....
சரவணன்.

கிராமத்துக் காதல்கதைகள்-1 - கருச ஊரணிக்கரையினிலே-பாகம் 1

அவன் அப்பொழுது தான் கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தான்.அவள் அருகிலுள்ள செங்கற்படை கிராமத்தை சேர்ந்தவள், அவர்களது மாவட்ட தலைநகரமான இராமநாதபுரத்தில் அரசு பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு சேர்ந்திருந்தாள்.

அவனைப் பொருத்தவரை அவள் ஒரு பொருட்டேயில்லை,அவன் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் அவள் என்பது மட்டுமே,கல்லூரிப் படிப்பை முடித்து ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், பக்கத்து கிராமங்களுக்கு சென்று கிரிக்கெட் விளளயாடுவதும் மட்டுமே அப்பொழுதைய வேலைஅவனுக்கு.

அப்பொழுது தான் அவனிடன் அவன் நண்பர்கள் "மாப்ள நம்ப ஊர்ல இருந்து காலேஜ் போய் படிக்கிறது அவ மட்டும் தான் ஆளும் நல்லா இருக்கிறா, உனக்கு கண்டிப்பா செட் ஆகும்டா" ஒருவன் மண்வெட்டியால் வெட்ட ஆரம்பித்தான்.

" உனக்கு சொந்தகாரப்புள்ள வேற அதனால நிச்சயம் உனக்கு தாண்டா" அடுத்தவன் விதையைப் போட்டான்.

"நேத்து பார்த்தேன்டா அவ பஸ்ல இருந்து உன்னை தான் லுக் அடிச்சிக்கிட்டு இருந்தா மாப்ள"அடுத்தவன் மண் போட்டு மூடினான்.

அவனுக்கு விருப்பமில்லாமலேயே அவனுள் காதல் விதை பயிரிடப்பட்டது. பின் அவனும் யோசிக்க ஆரம்பித்தான், நாம் அவளை காதலித்தால் என்ன தப்பு?( ஆஹா... இந்தா ஆரம்பிச்சுடான்ல).

அவள் பின்னால் அவன் சுற்ற ஆரம்பித்தான்.அதுவரை யாரோவாய் இருந்த அவள் பிறகு தவிர்க்கமுடியாத யாவுமாகிவிட்டாள்,


அவன் காதல்வயப்படுவதற்க்கு முன்பொல்லாம் அவள் முன்னிலையில் சாதாரணமாக வயற்காட்டிலிருந்து சைக்கிளில் பருத்தி மூட்டையையும், மிளகாய் மூட்டையையும், எடுத்துவரும் அவன், பின்னாட்களில் அவள் முன்னால் சைக்கிளில் செல்வதையே தவிர்த்தான்,அவள் வருவதை தூரத்தில் கண்டு கொண்டால் "கருவ"மரத்தினடியில் சைக்கிளை விட்டுவிட்டு தலைமறைவாகி பின் அவள் சென்ற பிறகே சைக்கிளுடன் வீடு வந்து சேர்வான்,அவள் முன்னால் சைக்கிளில் செல்வதையே ஒரு மானப் பிரச்சனையாகவே அவன் கருதினான்.

அதற்குமுன் அவள் கிராமத்திற்க்கு அதிகமாக செல்லாத அவன், பின்னாட்களில் அவளின் கிராமத்தில் எந்த ஒரு விழா என்றாலும் முதல் ஆளாக அவன் இருப்பான், அவனுள் பதியமிடப்பட்ட செடி வளர ஆரம்பித்தது,

அவள் தினமும் மாலை 5 மணிக்கு இருவரின் கிராமத்திற்கும் பொதுவான "கருசூரணி"க்கு(கரிசல் பூமியில் உருவான ஊரணி அதனால் அது கரிசல் ஊரணி,பின்னாட்களில் அது மறுவி கருசூரணி ஆயிற்று.)அவளின் தோழிகள் புடைசூழ, புடவைகள் சூழ குளிக்க வருவாள்.



அவள் குளிக்க வரும் அந்த மாலை 5 மணிக்காக, அவன் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து யோசிக்க ஆரம்பித்தான்,அவன் எங்கிருந்தாலும் மாலை 5 மணிக்கு கருசூரணியில் ஆஜராகிவிடுவான்.

சில நாட்களில் வெளியூர் சென்று கிரிக்கெட் விளையாடினாலும் சரி மாலைநேரம் எனில் , நடுவரிசை batsman ஆன அவன், அனைவரின் எதிர்ப்பையும் மீறி முதல் ஆளாக களமிறங்கி, அனைவரும் எதிர்பாத்ததுபோல அவுட் ஆகி மகிழ்ச்சியுடன் வெளியேறி ரத்தினா பஸ்ஸ பிடிச்சாவது 5மணிக்குள் வந்துவிடுவான்.(பின்னாட்களில் காதல் செடியை பதியமிட்ட அவனது சக கிரிக்கெட் நணபர்கள் தங்களுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டார்கள்).

கருசூரணி சற்று அகலமாக பெரிய அளவில் இருக்கும், அவள் ஊரைக்கடந்து அந்த ஊரணியின் கரையில் அவள் காலடி எடுத்து வைத்ததும் தான் அவன் இதயம் துடிக்க ஆரம்பிக்கும், அதை அவன் மிகவும் ரசிக்க ஆரம்பித்தான். அவள் நடந்து வரும் பொழுது கேட்கும் கொலுசு ஒலியே அவன் தேசியகீதம் ஆயிற்று. தனை மறந்து தண்ணீரில் அவள் வருகைக்காகா காத்துக்கொண்டிருப்பான்.

அவள் குளித்துவிட்டு வீடு நோக்கி கரையில் நடந்து,அவள் உருவம் மறையும் வரை வேறு சிந்தனையே அவனுக்கு இருக்காது, என்னதான் வெளியூரில் படித்தாலும் அவனும் ஒரு வெள்ளந்தியான கிராமத்தான் தான், வேறு எந்தவிதமான எண்ணமும் இன்றி அவளையே திருமணம் செய்து கொள்ளூம் நோக்குடன் முழுமையாக காதலித்தான்.

அப்பொழுதெல்லாம் நிலவு,சூரியன், கடல், வானம்,பூ என்று உளரலான கவிதை (அய்யனார்(??!!))வேறு புனைய முயன்றுகொண்டிருந்தான்.(பிற்காலத்தில் உளரல் வேறுமாதிரி இருக்கும் என்பதை அறியாமல்)

அன்புடன்...

சரவணன்.

Tuesday, May 8, 2007

கிராம இருப்பிடமும் , சுற்று வட்டாரப் பகுதிகளும்

எங்க ஊரப் பத்தி நீங்க எங்கயும் தெரிஞ்சிருச்க முடியாது,மேப்புலயும் பாத்துருக்க முடியாது வேனுமுனா நாஞ் சொல்லுறேன் எங்கேனு தெரிஞ்சுக்கங்க!

எனது கிராமம் பற்றிய.பழைய பதிவில் எனது ஊரின் பெயர் வளநாடு என்றே குறிப்பிட்டுள்ளேன்,ஆனால் எனது வீடு இருப்பது தெய்வதானம் என்னும் சிறிய பகுதியில்.வளநாடே எங்களது தாய்கிராமம் இரண்டிற்கும் இடைவெளி கிடையாது, தொடர்ச்சியாக வீடுகள்.தெய்வதானம் உருவாகி ஒரு 30 ஆண்டுகள் தான் ஆகியிருக்கலாம், இப்பொழுதும் வயக்காட்டிற்குப் போகும் பொழுது சிதிலமடைந்திருக்கும் ஒரு வீட்டக் காட்டி, எங்கப்பா, என்னிடம் இதுதான் மொதவீடு, நம்ம தெய்வதானதுக்கு மொத மொதலாக வந்த வீடுனு சொல்லுவாக.
இப்பொழுதுவரை ஒரு சந்தேகம்,யாரு ஊரின் பெயரை முடிவு செய்வது? எனது கிராமத்திற்கு பெயர்வைத்தவர் யாரென்று இதுவரைத் தெரியாது.அதேபோல் தெய்வதானம் என்றால் என்ன அர்த்தம் என்பதும் புரியவில்லை( தெய்வம் தானமாக கொடுத்த கிராமம் என்றா? இல்லை தெய்வத்திற்கு தானம் கொடுத்த கிராமம் என்றா?)வளநாட்டிற்கும் தெய்வதானத்திற்கும் இடைவெளியோ, வேறுபாடோ கிடையாது.இப்பொழுதும் பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போதும்.வீட்டிற்கு எப்பொழுதவது எழுதப்படும் கடிதத்திலும் எங்களுக்கான முகவரி வளநாடே, என்வே இனி வரும் பதிவுகளில் என் கிராமத்தின் பெயர் வளநாடு என்றே குறிப்பிடப் படலாம்

தெய்வதானம் கண்மாய்க்கரையில் அமைந்துள்ளது. கம்மாய்க்குள் இருக்கும் இரு கிருஸ்துவ கிராமங்கள் புஸ்போனம்(புஸ்ப வனம்), பொன்னக்கரை. தெய்வதாம் கிராமத்தைப் பார்த்து நிற்கும் பொழுது நொட்டாங்கப் பக்கம்(வடக்குப் பக்கம்)வளநாடு, இந்திரா நகர், காலனி, செபஸ்தியார்புரம், சேமனூர், மற்றும் கிராமமாக இருந்து நகரமாக வளர்ந்துவரும் சத்திரக்குடி.மதுரை-இராமேஸ்வரம் மெயின் ரோட்டில் சத்திரக்குடி உள்ளது!

தெய்வதானத்திலிருந்து சோத்தாங்கைப் பக்கமா(தெற்குப்பக்கம்) பாத்தா! செங்கற்படை, தேரிருவேலி, கருமல்,காக்கூர்,கடைசியா எங்கவூரின் தாலுகாவான முதுகுளத்தூர்.

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ள இருந்து முதுகுளத்தூர் இப்படியேத் தான் இருக்கு.சாதித் தலைவர்களின் சிலைகள் ரெண்டு மூனு மட்டும் கூடி இருக்கு, அப்போத் தானே சிலையின் தலையில் செருப்பு மாலை போட்டு ஏன்னு?கேட்க வருபவனின் தலையைத் தரையில் உருளச் செய்ய முடியும்,இவய்ங்க திருந்தவே மட்டாய்ங்க,எப்பவுமே இப்படித்தான். இதுதான் என் கிராம இருப்பிடம்.


அன்புடன்...
சரவணன்

கிராமத்துப் பக்கங்கள்- இதில் வரும் பதிவுகள் பற்றி



எனது கிராமத்தில் நான் பார்த்த பல விசயங்களையும் கேட்ட செய்திகளையும், அனுபவித்த கிராம வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பக்கங்கள்! இதில் வரும் பதிவுகளில் 95% உண்மையானவைகளே ஒரு 5% மட்டும் சுவாரஸ்யத்திற்கு தாளித்து எழுதப்படலாம்(நிச்சயமாக அல்ல, எழுதப்படலாம்).

இந்தப் பக்கங்களில் உள்ள பதிவுகளின் நோக்கம் கிராம வாழ்க்கை அனுபவித்திடாத அதே நேரம் அறிந்தாவது கொள்ளலாமே என்ற ஆர்வமாயிருக்கின்ற புதியவர்களுக்கும்,தங்களின் கிராமத்து நினைவுகளை புதுப்பித்து பால்ய நினைவுகளை மலரச் செய்ய பழையவர்களுக்கும் பயன்படும் என்பதற்கான எனது ஒரு சிறுமுயற்சி இந்தக் கிராமத்துப் பக்கங்கள்!



கிராமம் - ஜாதியம் இல்லாமல் இருக்காது! இங்கு ஜாதீயம் என்பது ஒருவரை பழித்துச் சொல்வதற்கு அல்ல,அவரை அடையாளைப் படுத்தவே பயன்படுகிறது,

உதாரணத்திற்கு என் அப்பாவைத் தேடிவரும் கணேசன் அப்பாவைக் காணமுடியாமல் சென்று, சிறிதுநேரத்தில் வீடு வரும் என் அப்பாவிடம் கணேசன் வந்தார் என்றால் எந்தக் கணேசன்?என்பார்(கிராமங்களில் சில பெயர்கள் மட்டுமே திரும்பத்திரும்ப பலருக்கும் வைக்கப்படும்) ஏனென்றால் எங்கள் ஊரில் வண்ணாவீட்டு கணேசன் உண்டு , பள்ளவீட்டு கணேசன் உண்டு,கீதாரி(கோனார்) கணேசன் உண்டு. இது போன்ற சமயங்களில் ஜாதி சொல்லியே சொல்வது வழக்கம். ஆமாப்பா, வண்ணாவீட்டு கணேசன் வந்துச்சு, துணி தேச்சாதுக்கு காசு கேட்டுச்சு என்பவை உதாரணங்கள்.
நிச்சயம் யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாகவோ அல்லது எதிர்கருத்துக்களுடன் விவாதிக்கும் படியாகவோ இருக்காது!

என் கிராமத்தைப் பொருத்தவரையில் அனைத்துஜாதியினரும் உண்டு, ஆசாரியில் இராமலிங்கஆசாரி ஐயா குடும்பம் மட்டுமே இருந்தது, இப்பொழுது இல்லை, ஜெயராஜ் நாடாரின் குடும்பம் மட்டுமே அவரின் இனத்தில், (நாடார் ஐயாவைப் பாக்கும் பொழுதெல்லாம் எனக்கு கள்ளிக்காட்டு இதிகாசத்தில் வரும் சைக்கிள் நாடார்தான் நினைவுக்கு வருவார், நாவலில் வருவது போன்று எப்பொழுதும் உள்ளூர் செய்திகளுடன் சைக்கிளில் வருபவர்). நாயக்கர், கவுண்டர் போன்ற ஜாதியினர் எங்கள் மாவட்டதிலேயே(இராமநாதபுரம் மாவட்டம்) இல்லை என்றே நினைக்கின்றேன்.


அன்புடன்...
சரவணன்.

கிராம தேவதைகளுக்கான வழிபாடு - முதல் பதிவு

கிராமத்துப் பக்கங்கள் என்னும் இந்த தொகுப்பில் இருப்பவை அனைத்துமே கிராமம் சார்ந்தவைகளே.அதாவது கிராமத்தில் நான் கேட்ட கதைகள், அனுபவித்த சந்தோஷங்கள், என அனைத்துமே கிராமத்தைச் சுற்றியே!கிராமம் பற்றிய பழையபதிவு.எனவே கிராம வழக்கப்படி ஒரு காரியம் செய்வதற்கு முன் கிராமத்தை சுற்றியுள்ள தெய்வங்களை வணங்குதல் முறை.அது வெளிநாடு போவதாக இருக்கட்டும்.பரீட்சை எழுதி முடித்ததாக இருக்கட்டும். கையில் ஒரு ஐந்து அல்லது ஆறு தேங்காயுடன் யாரவது கிளம்பிவிட்டால் அவர் ஒருரவுண்டு போய் அனைத்து சாமிகளையும் கும்பிடப் போகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று!

என்ன ஒரு குறை அனைத்தையும் சிதறு தேங்காய் உடைக்கமாட்டார், பொத்துனாப்புல ஒடச்சு சாமிக்கு வெறும் தேங்காய் தண்ணீ மட்டுமே, தேங்காய் அடுத்த நாள் சட்னிக்கு!

இதேபோல் கிராம வழக்கப்படி இந்தப் பதிவு தொடங்குவதற்கு முன் என் கிராமத்தைச் சுற்றியுள்ள தெய்வங்களை வணங்கலாம், பதிவில் தேங்காய் உடைக்கமுடியாதென்பதால் சும்மா கும்பிட்டுட்டு வரலாம்!நீங்களும் பக்தியுடன் பின் தொடருங்கள்(அதுக்காக மானிட்டருக்குப் பின்னால் போகவேண்டாம்!) நல்லதே நடக்கும்!



முதலில் மூலமுதற்கடவுள் பிள்ளையார், கம்மாக்கரையில் வீற்றிருப்பவரும், தற்பொழுது கும்பாபிஷேகத்திற்கு தயாராகின்றவருமாகிய பிள்ளையாரை வணங்குவோம்!(எல்லாப் பிள்ளையாரையும் போல் இந்தப் பிள்ளையாரும் அடுத்த ஊரிலிருந்து ஆட்டயப் போடபட்டதே)


கிழக்கில் இருக்கும் கருப்புளமடம்(கருப்பையா பிள்ளை மடம்) குமரக் கடவுளையும், கம்மாய் மடையினருகில் இருக்கும் மடக்கிரயானையும்(பெயர்காரணம் இதுவரை தெரிந்துகொண்டதில்லை! இனி கேட்டு அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்).



மேற்கிலிருக்கும் வயக்காட்டுக் காளியையும், வடக்கிலிருக்கும் வேலப்பூரணி(வேலப்பன் ஊரணி)ஐய்யனார்,மாவிடியான்(கோவக்காரச் சாமி, இந்தச்சாமி இருக்கிறபக்கம் இப்பொழுதும் காலை நீட்டி உட்காரவோ,படுக்கவோ எனக்கு பயம்),மற்றும் எல்லையில் இருக்கும் அய்யங்கோவில் அய்யனாரையும் வணங்கி பின் தெற்கே கம்மாய்க்குள் இருக்கும் வீரபத்திர சுவாமியையும் பக்தியுடன் வணங்கி இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.


அன்புடன்...
சரவணன்